ஞாயிறு, 30 டிசம்பர், 2012

வயிற்றுபசியும் வாய்க்கரிசியும் !!பட்டினி சாவில் பிறந்த சடலம்நான்
இன்றைய சராசரி மனிதரின் நிலைதானெனக்கும்
கையிருந்தும் கொடை தர இயலவில்லை
பருவமழை பெய்யுமென்று மனப்பால் குடித்திருந்தேன்
வானிற்கு மடிகட்டி மழைப்பால் கொடுக்கவில்லை
நிலம்பெறும் முன்னே பயிர்ப்பிள்ளை கனவாய்க்களைந்துவிட்டது   
தைப்  பிறந்தும் தைரியந்தான் பிறக்கவில்லை
நிவாரணம் வேண்டி நெஞ்செலும்பும் எட்டிப்பார்க்கிறது
விதைநெல்லை சமைத்திடத்தான் மனசும்தான் விரும்பவில்லை
கார்காலத்திற்கு கறுத்தெலிகள்கூட நெல்லை பதுக்கும்
பசிவயிறு பாடுதிங்கே விற்றநெல்மணிகளின் பெருமையை
உணவளிக்கும் கடவுளுக்கேயிங்கு ஒருவேளை சோறில்லை
புதைத்த விதையை மண்ணில் தேடயிலே
பெருத்த பிணங்கள் கிடைக்கும் மர்மமென்ன
எலியைப்  புசித்து ஏப்பம் விடும்
இந்த ஏழ்மைநிலை மாறும் நாளென்று
ஜகத்தை அழிக்கவேண்டாம் வாழ உணவளியுங்கள்போதும்
அடையாள உடலிலிருந்து உயிர்பறந்து அலைகிறது
உன்பூசையறையிலே கடவுளாய் நான் ஆனபின்னே
பசியற்ற பகவானுக்கு நீ படையலுந்தான் போட்டென்ன ?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக