செவ்வாய், 29 அக்டோபர், 2013

நான் ஆஸ்திகன் !!

அப்பா, அம்மா என்னும்
நம்மை படைத்த தெய்வங்கள்
இருக்கையிலே எல்லோரும்
ஆஸ்திகர்கள் தான் 

புதன், 23 அக்டோபர், 2013

என் முதற் பரிசே !!

Translation of poem wrote by my friend Pragalbha vasudevan for his brother.

நிலவைபோல் வானெங்கும் கண்களை உருண்டோடவிட்டு
நன்கு ஒளிரும் வால்நட்சத்திரத்தை தேடின கண்கள்
நாம் எண்ணியதை தரவல்ல கற்பகத்தருவது
நொடிப்பொழுது கண்மூடி பிஞ்சுக்கைகூப்பி வேண்டினேன்
நெடுநாள் அல்லும்பகலும் என்னோடிருக்கத் துணைவேண்டி
நிகழ்ந்தது அந்த அதிசயம் இருபதாண்டுகளுக்கு முன்பு- விழுந்தது
நட்சத்திரம் என்கையிலே அன்பின் வடிவமான குழந்தையாய்
நான் பெற்ற பரிசு பிஞ்சுக்கையுதறி புன்னகைபுரிந்தது
நரைமுடி சாண்டாகிளாஸ் தன்பரிசுமூட்டையை கொடுத்தாற்போல்
நான் கண்ணனின் பிம்பமான பிரத்யும்னாவை கண்டு மகிந்தேன்
நாட்கள் மாதங்களாய் மாதங்கள் வருடங்களாய் உருண்டோட
நாங்கள் அன்பைபகிர்ந்து துயரங்களை இணைந்தே போராடினோம்
நெடுங்காலம் வாழவாழ்த்தும் முதல் தோழி உன் அக்கா 

வெள்ளி, 4 அக்டோபர், 2013

மிட்டாய்                    (Photography: Mahesh shenoy)

மகன் முகம் மலர
அப்பா வாங்கிவந்த மிட்டாய்
கடைக்காரன் சில்லறைக்கு
பதிலாய் கொடுத்தது

வியாழன், 3 அக்டோபர், 2013

கணபதி துதி


                      (Painting : Kamala Palaniappan)

அரசு அடியதனில் அமர்ந்திருந்த ஆனைமுகத்தவனை
பரசுராமன் வெண்தந்த முடைத்திட்டான் அதனை
முரசு அறைந்து முடிதரித்த பாண்டவ
அரசு காதை பாரதமும் படைத்திட்டான் கணபதியான்

புதன், 28 ஆகஸ்ட், 2013

ஆடைகள் வேண்டாம் கண்ணா !!

உடலென்னும் துகிலுரித்து எமன் போகட்டும்
உயிரதுவோ உன்திருவடியை சேரட்டும்
உதிர்த்திடாதே திரௌபதிக்கு துகில் கொடுத்தார்போல்
உடலதனை நான் மறுபிறவி எடுக்க

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சிப்பாய்கள்

வெள்ளைநிற மலைகளிலே சிலையாயுறைந்து
எல்லைக்கோட்டை வரைந்ததை அழியாது காப்பவர்கள்
வெள்ளத்தில் தத்தளிப்பவர்க்கு கைகொடுத்து - தன்
பிள்ளைகள் மனைவிதனை பிரிந்து - நம்நாட்டவரை
கொல்லத்துடிக்கும் கயவர்களுக்கு தன்னுயிர் கொடுத்து-போரை
வெல்லச்செய்தவர்கள் வேண்டுவது சக்கர விருதுகளல்ல
வெள்ளைவேட்டிக்காரர்களிடம் தம்பாதுகாப்பிற்கு அண்டைநாட்டுடன் ஒப்பந்தமே !!
சனி, 3 ஆகஸ்ட், 2013

யாருடா உன்னுடைய தோழி ?


எனக்குள் புதைந்துவிட்ட திறமைசாலியை தட்டிஎழுப்பிட
நான் துவண்டு வீழ்கையிலே உத்வேகம் ஊட்டிட
என்னை பற்றி பிறரிடம்கூறியிலே கர்வம் கொள்ள
என்கோபத்தை மழலைமொழி பேசிக்கரைத்திட
நான் மறந்துவிட்டாலும் என்னை அழைத்து நலம்விசாரித்திட
காதலை புகுத்தி என்நட்பை இழிவுசெய்யாது வாழும்
என்னுடைய  உடன்பிறவா சகோதரிக்கு காவலாய்
இருந்து உயிரையும் தருவதே சரி!

யாருடா உன் நண்பன் ?

தோள்மீது கைபோட்டு ஒய்யார நடைபோட
புகை பரிமாறி மகிழ்ந்திட
மது அருந்தி உண்மைகள் உளறிட
என்னோடு மைதானத்தில் பந்து விளையாடிட
இருசக்கர வாகனத்தில் ஊரை அலசிவிட
குட்டி சுவரில் அமர்ந்து வெட்டிக்கதைகள் பேசிட
என் சகோதரியை தன் சகோதரியாய் பார்த்து
அவளின் திருமண வேலைகளில் பங்குபோட்டிட
என் காதலை சேர்த்துவைத்திட
என்பெற்றோரிடம் என் ஆசைக்காக பரிந்துபேசிட
ஆபத்து காலத்தில் பணஉதவி செய்திட
நான் தளர்ந்த நேரத்தில் தோள்கொடுத்திட
என்வீட்டில் உடல்நிலை சரியில்லாதவரை
மருத்துவமனை அழைத்துசெல்ல உதவியாய்
என்உணர்வுகளை புரிந்து நடந்து
இத்தனையும் செய்யும் ரத்தபந்தமில்லா சகோதரனுக்கு
நான் என் உயிரை தருவதே சரி !திங்கள், 29 ஜூலை, 2013

வெங்காயம் !!

உரிக்காமல் அழவைக்கின்றன
விலைஉயர்ந்த வெங்காயங்கள்


மழைக்காதலி ..!

ஒரு துளி மழையை
லாவகமாய் பிடித்திட
ஓராயிரம் காலிக்குடங்கள்

உயரப்பறக்கும் கழுகாய் பிறந்திருந்தால்
மேகக்குடங்களை உடைத்து
பூமிக்கு தண்ணீர் கொணர்ந்திருப்பேன்

வாதி மக்கள் பிரதிவாதி இந்திரன்
என்று பேசிட
தீர்ப்பாயங்கள் வைக்கவும் இயலாது

வேரைப்போல விரல்கள்
வளருமென்றால் வானைத்துளைத்து
வயிறுமுட்ட தண்ணீர்மொண்டு குடித்திருப்போம்

தண்ணீர் கடவுளான வருணனுக்கு
லஞ்சம் கொடுக்க
முடிந்திருந்தால் மழையை பொழியச்செய்திருக்கலாம்

மரங்களாய் பிறந்திருந்தால் கிளைக்கைகளை
அசைத்து மழையை
அழைத்து பொழியச் சொல்லியிருப்போம்

அன்னப் பறவையைபோல் 
பிரித்தறியும் திறனிருந்தால்
கடல் தண்ணீரை குடித்தே வாழ்ந்திருப்போம்

இக்கவிதையை கொடுத்து மழையிடம்
காற்றை தூதுவிட்டோம்
காதலியை பிரிந்துவாடும் காதலன்போல 

  

 

சனி, 20 ஜூலை, 2013

அங்கயற்கண்ணி துதி


ஓங்காரநாதத்தின் பொருள் ஓதாது உணர்ந்த போதிலும் 
குபேரன் போல் நீங்காத செல்வம் அடைந்த போதிலும் 
அமிழ்தமுண்டு தேவர்கள்போல் சாகாத வரமடைந்தபோதிலும் 
உன்னை காணாத ஒருதினமும் வேண்டிலேனே.

Translation:
----------------

Hey Lordess Meenakshi who reside in Madurai,

Even when I am able to understand the meaning of word 'OM'(Even lord Shiva got KT from Lord Muruga to understand it)

Even when I have more wealth like lord Gubera (God of wealth,Even lord Vishnu got loans from him)

Even when I have a chance to have the drink named 'Amirtham' which keeps angels from death(If u have read 'The Immortals of Meluha' series , u knw tat is 'Somras')

I don't want a single day without seeing u.

சனி, 6 ஜூலை, 2013

ரஞ்சி ராமாயணம்

ராமனும் அவனது வானரக்கூட்டுமும்
ராவணனை வெல்ல அமைத்தபாலம்
இன்று விளையாடும் ஆடுகளமாக
(The bridge laid by lord rama and his monkey crew has becum the pitch now)

இலக்குமணன் இராவணன் வெற்றிக்கு
தடையாய் சீதைமுன் இட்டகோடு
இன்று மைதான எல்லைவரைகளாக
(The circle drawn by lakshmana to protect sita has becum boundary line now)

ராமனால் வெற்றிகொல்லப்பட்ட ராவணனின்
பத்துகுணங்களும் அதைசுமந்த உடலும்
இன்று பதினொன்று வீரர்களாய்
( Ten characters (which are depicted as ten heads) of ravana  and his human body defeated by lord ram has becum eleven member team now)


ராவணன் எய்த அம்புகளை
பந்தாடிய அனுமனின் கதாயுதம்
இன்று பந்தாடும் மட்டைகளாக
(The weapon used by hanuman to hit arrows showered from ravana's bow has now becum bat)

ராவணன் தோளைதட்டி அனுப்பி
ராமனை ஒடவிட்ட மாயமான்
இன்று உருண்டோடும் பந்துகளாக
(The magical deer send by ravana and chased by rama has becum ball now)

ராமன் இட்ட மூன்றுகோடுகள்
தங்கி நின்ற அணில்
இன்று நட்டுவைத்த மூன்றுகுச்சிகளாக
(The squirrel which stand with three lines drawn by rama has becum stumps now)


சனி, 22 ஜூன், 2013

அவள் இல்லாத அலுவலகம்

நுரையில்லாத அலையைபோல
அலையில்லாத கடலைப்போல
கடல்லில்லாத புவியை போன்றது
அவள் இல்லாத அலுவலகம்

கரையில்லாத நிலவைப்போல
அமாவாசை வானைப்போல
விண்வெளியை மறைத்துக்கொண்ட
வான்குடைதான் தொலைந்ததுபோல
அவள் இல்லாத அலுவலகம்

வண்டை ஈர்க்கும் வாசனை
இன்றி தோன்றிய மகரந்தம்போல
மகரந்தம்யின்றி பூத்த மலர்போல
மலராது வாழும் கன்னிச்செடிபோல 
அவள் இல்லாத அலுவலகம்

வானில் வண்ணக்கோலமிடாத
வானவேடிக்கைகள் போல
வானவேடிக்கைகள் இல்லா
தீபாவளித் திருநாள்போல
பார்வையற்றவருக்கு தீபாவளிபோல
அவள் இல்லாத அலுவலகம்

கையசைவிற்கு இசை எழுப்பாத
தந்திகள் போல
தந்திகள் இல்லாத வீணையைபோல
வீணை இல்லாத வாணியைபோல
அவள் இல்லாத அலுவலகம்

மரங்கள் இல்லாத பாதைகள்போல
பாதைகள் இல்லாத பாலையைப்போல
பாலைவனத்திலிருந்து பாதைமாறிவந்த
ஒட்டகம்போல எனக்கு
அவள் இல்லாத அலுவலகம்
 

வியாழன், 13 ஜூன், 2013

நிதர்சனம்

பொங்கலுக்கு புத்தாடை புனைந்து
பெற்றோருடன் பண்டிகை கொண்டாடிட
பிராத்தனைகளோடு பாதம் நகர

மேலாளரிடம் மெல்லிய குரலில்
மன்றாடி முத்துக்கண்ணீர்
முந்தைய நாளிரவிருந்து
முடித்த வேலையால் வாடிய
முகம்வழியோடி மறுத்து நின்றவன்
மனம்கனிய அவன்கால் நனைத்திட
மறுக்கணமே சென்றுவர பணித்த
மறுமொழிகேட்டு
மலர்ப்பாதம் உடலிடை  குறைய
மிதந்தன காற்றில்

மடைதிறந்து வானத்திலிருந்து
மண்வரத்துடிக்கும் மழைத்துளிகள்போல்
மகவிலிருந்து சுமந்த சொந்தமண்ணை காண
மக்கள் கூட்டம் காத்திருந்தன தொடர்வண்டிக்கு
முகத்தருகே கானல் நீர்போல் தோன்றி
மறைந்திடும் தொடர்வண்டியும் சொந்தங்களும்

முன்பதிவில்லாமையால் முதல்வண்டி வந்தவுடன்
முந்தியடித்து மற்றவரோடு முட்டிமோதி
மண்ணைப்பிளந்து நிலத்தில் இடம்பிடித்த செடிபோல
மூலையில் முழங்கால் நீட்டிடவும் முடியாதபடி
முடங்கி மூச்சு வாங்கிப்பின்
மழையற்ற பூமிபோல பிளந்துநின்ற
நாவை  நனைத்திட நன்கு நீர்பருகி
கடிகார முட்களைப்போல் இருபுறமும்
மரங்கள் நகர்ந்திட காத்திருந்த வேலை
நெருங்கிடும் செய்திசொல்லி போய்விடும்


பணப்பைக்குள் வைக்கப்பட்ட குடும்ப புகைப்படம்
பலமுறை பார்த்து புன்னகை புரிந்து
பாசத்திற்கும் வீட்டுச்சோற்றிற்கும்
முதுகெலும்பு படும்பாட்டை மறந்து
முகத்தில் மலர்ந்த வியர்வைவழியே
கவலை   தொலைந்ததெனக்கருதி துடைத்தபடி
கடலும் மலையும் கடந்துவந்த கதிரவன்போல்
சொந்தமண்ணை கண்டவுடன்
மகிழ்ச்சியில் பொலிவுரும் சோர்ந்த முகமும் 

சனி, 20 ஏப்ரல், 2013

முதுமை

பாண்டி ஆட்டம் போட்ட கால்கள்
இன்று நொண்டியாட்டம் போடும்
எலும்பைக் கட்டிப்பிடித்த தசைகள்கூட
ஊடல் செய்யும் நேரம்

பருவம்வந்த பெண்ணைக் கூட
பார்க்கும் பார்வை மாறும்

நெஞ்சம் நிறைந்த நினைவுகளை
வாய் நித்தம் அசைபோடும்
இரவும் பகலும் ஓயாமல்
இருமல் உயிரிருப்பதை பறைசாற்றும்
நித்தம் சோறின்றி பயிர்போல்
நீரால் உடல் வாழும்
குட்டிபோட்ட குட்டியை காக்க
காலம் கழிந்து போகும்
சுவரில் ஓவியம் ஆகும்வரை
சிலையென மூலையில் வாழுமிவர்க்கு

மருமகளிடம் உரிமையுரைத்தால் எங்ஙனம்
மௌன விரதம் கலைந்து கத்தியகுயிலுக்கு
காக்கைக்கூட்டில் இடமில்லையோ அதுபோல்
மகன்வீடின்றி முதியோர் இல்லத்தில் தானேவாழ்வு!!!
வியாழன், 11 ஏப்ரல், 2013

விடியலெங்கெ ?

விடியலை உணர மறந்து உறங்கியவன்
காதுகளில் விளித்து கொண்டிருந்தன விட்டில்கள்
கண்களுக்குகுள் வட்டம் போட்டுக்கொண்டிருந்தன வவ்வால்கள் 

ஞாயிறு, 24 மார்ச், 2013

தெய்வம் எங்கே?


ஏக்கமெனும் உப்பலைகள் எண்ணக்கடல் மேலுயர
காக்குங் கடவுளுக்கு காத்திருந்த ராத்திரியும்
பாக்குடன் வெற்றிலையும் வைத்தழையாது வந்ததின்று
தூக்கத்தால் கண்கதிரவன் இமைப்பொதிக்குள் போனபின்னே

கவலைகள் நித்தமும் கற்களாய் குவிந்து
மலைச்சிகரமாய் மண்டிப்போக மனம் சலியாது
சிலையென சிகரத்தின் சிரசில் நின்றோனென்
நிலை கண்டிங்கு நிஜத்தினில் வருவானென

நெஞ்சமதில் நித்தமும் கடவுளின் நினைவோடு
தஞ்சம்புக பிறந்தவீடு ஆலயமென்று எண்ணி
மஞ்சம் துறந்திங்கு மலைமுகட்டில் கால்கள்
கெஞ்ச காத்திருந்தவனை காணச் சென்றேன்

கட்டுக்கதை கட்டிவிட்டார் கடவுளை கல்லென
எட்டநின்று பார்ப்பவற்கு எப்படித் தெரிந்திருக்கும்
கிட்டே சென்றேன் கட்டித் தழுவினேன்
கொட்டிவிட்டேன் கடவுளின் காதில் கவலைகளை

தேக மதிர தோளில் தட்டிக்கொடுத்தான்
மேகத்திரள் எடுத்து கண்ணீர் துடைத்தான் 
சோகம் பகிர்ந்த கறுத்த மேகங்கள்
உலகம் நனைந்திட கண்ணீரை பொழியக்கண்டு

விரித்த தோகையோடு வண்ணமயில் நடனமிட
சிரித்த ஒலி இடியென வானையுலுக்க
மரித்த உடல் உயிர்பெற்று பந்துபோல்
தெரித்தெழ களிநடம் புரிந்தான் கடவுளுமிங்கு

அந்தமும் ஆதியு மில்லாது தனித்து
சொந்த பந்த உறவறுத் திருந்தேன்
தந்தையும் தாயும் நீயென கருதி
பந்த பாசம் பகட்டினாயென் புத்திக்கென்று

சுகந்த மணந்தவழ நின்ற சுந்தரன்தான்
நடந்தயென் காலார தன்மடிக்கிடத்தி
கடந்த சோகம்மறைய கண்ணுறக்கம் தந்திட்டான்
கிடந்த நிலையிலே கண்விழித்தேன் தாய்மடியில்  

வியாழன், 21 மார்ச், 2013

நண்பனே நீயெங்கே??

வெளிச்சத்தின் நிழலாய் இருக்கும்
இருள்போல நான் வெளிச்சம் நீ
அண்டங்கள்கடக்கும் தொலைவினில் நாம்
நீ வளர்ந்தால் நான் வளர்வேன்
வளர்பிறையாய் நீ தேய்பிறையாய் நான்
இருதுருவங்கள் போலநாம் இணையாவிடினும்
நதி பிணைக்கும் இருகரைகள்போல 
ஈர உணர்வு நம்நெஞ்சங்களை பிணைக்கட்டும்


என்னை விட்டுச் செல்லாதே...

சவலைப் பிள்ளையாய் பிறந்திருக்கலாம்
சம்சாரி ஆகாமல் தாயின்
சேலையின் நுனியை பிடித்திழுத்து
செல்லவிடாமல்  தடுத்திருப்பேன் முதியோர் இல்லம்


திங்கள், 18 மார்ச், 2013

நெஞ்சமேங்கும் நொடிகள் !!!

விழிகள் என்னும் மீன்கள்
கண்மீன்கள் வீசிடும் வலைகள்
இமையுனுள் கருவறைகள்
அதில் ஆனந்தக்  கண்ணீர் குளங்கள்
விரல்கள் என்னும் விலங்கில்
கைகோர்த்திட துடிக்கும் மனது
காதில் ஆடிடும் தோடு
என்னை தாலாட்டிடும் தொட்டில்
உன் ஸ்பரிசம் பட்டபிறகு
மெல்ல குறைந்திடும் வருடம்
சிப்பிவாய்திறந்து முத்தமொன்று கொடுத்தபின்னே
வேறுசெல்வம் வேண்டுமோ உள்ளம் ?


புதன், 13 பிப்ரவரி, 2013

தமிழ் பெண்ணின்மீது உண்டான காதல்

சிறுகோபங்கள் ஏனடி
காத்திருக்கும் நிமிடம் இன்னும் நீளுமோ
காதல்மொழி கேட்க வலிதீருமோ
சோகங்கள்
ஏக்கங்கள்
ஆவலின் வேதனை
ஏனடி மெல்கிறாய்
சொல்லடி காதலை !!!


மெல்லிய மனதில் ஏதோ சலனம்
விழிகளை கவரும் உந்தன் அழகும்
நிழலாகி நித்தமும் என்னைத்தொடரும்
கருவிழி எழுதிய கருமை நிறமும்


தொலைவிலும் நெருக்கத்தை உணரும் இதயம்
குழந்தையின் மழலைபோல் புரியா உணர்வில்
கொண்டலில் நீரைப்போல் வார்த்தைகள் தேங்க
பாலையில் பாதமாய் புதைந்திடும் நாவும்


புதன், 30 ஜனவரி, 2013

ஓர் கலைஞனின் கண்ணிர் !!

மனிதனே உன்மனசாட்சியை ஒருமுறை கேள்
மண்ணில் நீ மனிதயியந்திரமாய் மாறிவிடாதிருக்க
மாறுவேடம் கட்டி கோமாளி போல
மகிழ்விக்க அவன்செய்த காரியங்களை கேலிசெய்து
மூச்சுபிடிக்க சிரித்தாய் அந்த அங்கீகாரத்தை
மதித்தான் அதற்காக நாளும் உழைத்தவனைநீ
மறந்திட்டாய் காலியான கொட்டகையை கண்டதும்
மனம் நொந்தான் முகச்சாயம் கரைய
மண்நனைத்தது ஒருதுளிக்கண்ணீர் !!


ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

உலகில் உங்களை கவர்ந்தபெண்
யாரென்றுகேட்ட மனைவியிடம் மனதில்
மானசீகமாயிருப்பவளின் மேலுண்டான முதற்காதல்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

கொலையை கண்ணால் கண்டிருந்தும்
காவலர் விசாரிக்கும்போது இரக்கமில்லாக்
கயவர்களின் அங்க அடையாளம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா ?

வேறு நிறுவனத்தில் நேர்காணல்
விடுப்பு கேட்டவுடன் முதலாளி
விடுப்பின் காரணம்பற்றிக் கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாதக்கடைசியில் பெற்றபிள்ளை பள்ளியின்மூலம்
இன்பச்சுற்றுலா செல்லப்பணம் கேட்டால்
குடும்பச்சூழ்நிலை பற்றித் தந்தை
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசும்
பெண்ணிடம் யாருடனென்று தாய்கேட்க
பேசுவது தோழனுடன் தானென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாலைநேரத்தில் நண்பர்களுடன் மதுவருந்தச்செல்லும்
மகனிடம் செல்வதெங்கென்று கேட்டத்தந்தையிடம்
பரிட்சைக்கான கூட்டுமுயற்சி அன்றென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வாழ்வின் கடைசிநாட்களை எண்ணும்
நோயாளியை பரிசோதித்த மருத்துவர்
மருந்தோடு தைரியமுந்தராமல் நிகழப்போகும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தேர்தலின் பிரச்சாரத்தின்போது வாக்குறுதிகளை
அள்ளிவீசும்  கரைவேட்டிக்காரனிடம் அரசியலுக்கு
வந்த நோக்கம்பற்றி நிருபர்கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

ஆடித்தள்ளுபடியில் சலுகை தரப்பட்ட
பொருட்களை வாங்குவோரிடம் தரம்பற்றி
கடைக்காரனும் விலைபற்றி விலைப்பட்டியலும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

எதிரியின் கையில் அகப்பட்டு
நிராயுதபானியாய் துப்பாக்கி முனையிலிருக்கும்
வீரன் ராணுவ ரகசியம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மருத்துவரிடம்  அழைத்துச்செல்லப் பணிக்கும்
பெற்றோரிடம் மனைவியுடன்  தனிமையில்
திரைப்படம்பார்க்க நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டதாக
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தன்னை விட்டுப்பிரிந்த காதலியை
நண்பன் மனைவியென்று அறிமுகம்செய்ய
தெரிந்தமுகமென்றும் உடைந்த உறவுபற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வகுப்பறையில் நேரம் கடந்துவந்த
மாணவனை அறைக்குள் மறுத்த
ஆசிரியரிடம் அனுமதி வாங்க
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

பலபோரில் புறமுதுகு காட்டிய
மன்னவனைக் காணவந்த ஏழைப்புலவன்
அவன்வீரம் பற்றிக் கவிதைகளில்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?செவ்வாய், 15 ஜனவரி, 2013

எவனடா தமிழைப் படிப்பான் !!

தமிழை அலங்கரித்திட ஆயிரம்நூல்கள்
பெருமிதத்துடனும் ஆவலுடனும் எழுத்தாளர்கள்
தமிழை எழுத்துக்கூட்டும் வாசகர்கள்
இதுதான் தமிழின் நிலை

விலையின்றி கிடைத்ததாலோ என்னவோ
விலைமதிப்பற்ற தமிழ்மொழி அறிவை
விழுதுகளாய் இருந்து காக்கவேண்டியவர்கள்
விரல்களால் பிணைக்கப்பட்ட புத்தகமுதறி
விலைகொடுத்துப் பெற்ற ஆங்கிலம்
விடியலை கொணர்ந்ததென்று எண்ணி
வாய்க்கொப்பளித்து தமிழை உமிழ்ந்துவிட்டு
விட்டில்களாய் விளக்கொளியைச் சூழ்ந்துள்ளனர் 
விளக்கிச்சொன்னால் நானந்த மடமையை
விருதாய்க்கொடுப்பர் பித்தர் பட்டம் 

ஆங்கிலேயரோடு வாணிபம் செய்ய
அவர்மொழி அறிதல் தவறன்றெனினும்
அண்மையில் மணம்முடித்தவன் தாய்போல
அன்னைத்தமிழை தவிர்த்தல் முறையன்று

நகமும் முடியும் போன்று
நறுக்கிக்களையும் பொருள் தமிழன்று
நரம்பிலும் மூலையிலும் பாயுங்க்குருதியென
நீயுணர கல்லும்முள்ளும் காலிடறி
நெளிந்தோடும் ரத்தத்தோடு அம்மாயெனும்
நாதம் பிறந்திட உணர்ந்திடுவாய்

பூச்சியமும் ஒன்றும்தான் கணினிமொழி
புதுமைகள் அதைமாற்றிட இயன்றிடுமோ?
புத்திக்கு தானே புரிந்திடுமோ தமிழன்னையின்றி
புதுவுறவாய் வந்த ஆங்கிலத்தை?