ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

உலகில் உங்களை கவர்ந்தபெண்
யாரென்றுகேட்ட மனைவியிடம் மனதில்
மானசீகமாயிருப்பவளின் மேலுண்டான முதற்காதல்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

கொலையை கண்ணால் கண்டிருந்தும்
காவலர் விசாரிக்கும்போது இரக்கமில்லாக்
கயவர்களின் அங்க அடையாளம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா ?

வேறு நிறுவனத்தில் நேர்காணல்
விடுப்பு கேட்டவுடன் முதலாளி
விடுப்பின் காரணம்பற்றிக் கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாதக்கடைசியில் பெற்றபிள்ளை பள்ளியின்மூலம்
இன்பச்சுற்றுலா செல்லப்பணம் கேட்டால்
குடும்பச்சூழ்நிலை பற்றித் தந்தை
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசும்
பெண்ணிடம் யாருடனென்று தாய்கேட்க
பேசுவது தோழனுடன் தானென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாலைநேரத்தில் நண்பர்களுடன் மதுவருந்தச்செல்லும்
மகனிடம் செல்வதெங்கென்று கேட்டத்தந்தையிடம்
பரிட்சைக்கான கூட்டுமுயற்சி அன்றென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வாழ்வின் கடைசிநாட்களை எண்ணும்
நோயாளியை பரிசோதித்த மருத்துவர்
மருந்தோடு தைரியமுந்தராமல் நிகழப்போகும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தேர்தலின் பிரச்சாரத்தின்போது வாக்குறுதிகளை
அள்ளிவீசும்  கரைவேட்டிக்காரனிடம் அரசியலுக்கு
வந்த நோக்கம்பற்றி நிருபர்கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

ஆடித்தள்ளுபடியில் சலுகை தரப்பட்ட
பொருட்களை வாங்குவோரிடம் தரம்பற்றி
கடைக்காரனும் விலைபற்றி விலைப்பட்டியலும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

எதிரியின் கையில் அகப்பட்டு
நிராயுதபானியாய் துப்பாக்கி முனையிலிருக்கும்
வீரன் ராணுவ ரகசியம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மருத்துவரிடம்  அழைத்துச்செல்லப் பணிக்கும்
பெற்றோரிடம் மனைவியுடன்  தனிமையில்
திரைப்படம்பார்க்க நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டதாக
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தன்னை விட்டுப்பிரிந்த காதலியை
நண்பன் மனைவியென்று அறிமுகம்செய்ய
தெரிந்தமுகமென்றும் உடைந்த உறவுபற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வகுப்பறையில் நேரம் கடந்துவந்த
மாணவனை அறைக்குள் மறுத்த
ஆசிரியரிடம் அனுமதி வாங்க
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

பலபோரில் புறமுதுகு காட்டிய
மன்னவனைக் காணவந்த ஏழைப்புலவன்
அவன்வீரம் பற்றிக் கவிதைகளில்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக