வியாழன், 13 ஜூன், 2013

நிதர்சனம்

பொங்கலுக்கு புத்தாடை புனைந்து
பெற்றோருடன் பண்டிகை கொண்டாடிட
பிராத்தனைகளோடு பாதம் நகர

மேலாளரிடம் மெல்லிய குரலில்
மன்றாடி முத்துக்கண்ணீர்
முந்தைய நாளிரவிருந்து
முடித்த வேலையால் வாடிய
முகம்வழியோடி மறுத்து நின்றவன்
மனம்கனிய அவன்கால் நனைத்திட
மறுக்கணமே சென்றுவர பணித்த
மறுமொழிகேட்டு
மலர்ப்பாதம் உடலிடை  குறைய
மிதந்தன காற்றில்

மடைதிறந்து வானத்திலிருந்து
மண்வரத்துடிக்கும் மழைத்துளிகள்போல்
மகவிலிருந்து சுமந்த சொந்தமண்ணை காண
மக்கள் கூட்டம் காத்திருந்தன தொடர்வண்டிக்கு
முகத்தருகே கானல் நீர்போல் தோன்றி
மறைந்திடும் தொடர்வண்டியும் சொந்தங்களும்

முன்பதிவில்லாமையால் முதல்வண்டி வந்தவுடன்
முந்தியடித்து மற்றவரோடு முட்டிமோதி
மண்ணைப்பிளந்து நிலத்தில் இடம்பிடித்த செடிபோல
மூலையில் முழங்கால் நீட்டிடவும் முடியாதபடி
முடங்கி மூச்சு வாங்கிப்பின்
மழையற்ற பூமிபோல பிளந்துநின்ற
நாவை  நனைத்திட நன்கு நீர்பருகி
கடிகார முட்களைப்போல் இருபுறமும்
மரங்கள் நகர்ந்திட காத்திருந்த வேலை
நெருங்கிடும் செய்திசொல்லி போய்விடும்


பணப்பைக்குள் வைக்கப்பட்ட குடும்ப புகைப்படம்
பலமுறை பார்த்து புன்னகை புரிந்து
பாசத்திற்கும் வீட்டுச்சோற்றிற்கும்
முதுகெலும்பு படும்பாட்டை மறந்து
முகத்தில் மலர்ந்த வியர்வைவழியே
கவலை   தொலைந்ததெனக்கருதி துடைத்தபடி
கடலும் மலையும் கடந்துவந்த கதிரவன்போல்
சொந்தமண்ணை கண்டவுடன்
மகிழ்ச்சியில் பொலிவுரும் சோர்ந்த முகமும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக