ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

விலங்கு


அம்மா வேலையை 
முடிக்கும் வரை 
கைபேசி விலங்கிட்டு 
கிடந்தது பிள்ளை


பால் மண(ன)ம் மாறட்டும்


குழந்தைகளே பால்குடியை  மறந்து
சோறு  உண்ணக் கற்றுக்கொள்ளுங்கள்
அதுதான் மலிவு விலை

நடிகர்களே உங்கள் உருவப்பலகைக்கு
ரசிகர்கள் செய்யும் பாலாபிஷேகம் 
வேண்டாமென சொல்லிவிடுங்கள்

வயிற்றுக்கே பாலில்லை கன்னிகள்
 புற்றுக்கு எப்படி கொடுப்பார்கள்
 நாகங்களே மன்னித்துவிடுங்கள்

கடவுள்களே பால் இல்லாத 
குடமுழுக்கை கனிவோடு பெற்று 
அருள் கொடுத்திடங்கள்

தேனீர் கடைக்காரர்களே தேடிக்கொள்ளுங்கள் 
வேறு வேலையை பாலில்லாத பாணங்களை 
நாங்கள்  விரும்புவதில்லை 

ஆண்மாக்களே பாலின்றி சாந்தி அடைந்திடுங்கள் 
பாலை பூமிக்கு வார்த்திடும் 
வள்ளல்கள் நாங்களில்லை 

அன்னம் உயிரோடிருந்தால் 
நீரிலிருந்து பாலை எடுக்கும் 
வித்தையை கேட்டிருக்கலாம்

 தாய்ப்பாலை திருடி காசாக்கும் கயவர்களை 
துறத்த மறந்த பசுக்களே உங்களுக்கு 
தெரியுமா இன்றைய  பால் விலை என்னவென்று 

ருசி


குமுதாவிற்கு அவள்
அம்மா வைக்கும்
கோழிக் குழம்பு 
ருசியாகத்தான் இருந்தது 
அவள் ஆசையாக 
வளர்த்த  கோழி 
குழம்பில் கொதிக்கும் வரை