ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் - கவிதை நூல் விமர்சனம்      அறிமுகமான சிலநொடிகளிலேயே பலநாள் பழகியவர் போல கலகலவென பேசுபவர் தோழர் சூர்யா அவர்கள்.மேடைப்பேச்சுகளில் கணீர் என ஓங்கி ஒலிக்கும் அவர் குரல்.

காதலர் தினத்தை முன்னிட்டு வாசிக்க அவரின் 'ஓவிய ஃபிரேமிலிருந்து வெளியேறும் பறவைகள்' கவிதை நூலை எடுத்தேன்.சூர்யாவின் இதய ஃபிரேமிலிருந்து வெளியேறும்  காதலிய கவிதைகள் சிறகடித்து சந்தோஷ வானில் மிதந்தபடி இருக்கின்றன.வாழ்க்கை,குடும்பம்,ஆன்மா இவற்றின் மீதான ஆழமான புரிதல் இவரின் கவிதைகளில் தெரிகின்றது.கடவுளர் மற்றும் சரித்திரகால கதாபாத்திரங்களை கொண்டு தாம் கூறவந்த கருத்துக்களை பதிவு செய்திருக்கின்றார்.

'தாசி அம்மன் குறித்த புனைவாளனின் பிரதி' என்ற கவிதை குறிப்பிட தகுந்த சிறந்த கவிதை ஆகும்.இந்த பெயர் குறித்து பல எதிர்மறை கருத்துக்கள் ஒருபக்கம் இருக்கட்டும்.'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' என்றான் பாரதி.பெண்களை தெய்வமாக பார்ப்பதாய் சொல்லும் இந்த நாட்டில் தான், பெண்கள் பலர் பாலியல் தொழிலில் பலவந்தமாக தள்ளப்படுகிறார்கள்.தாசியை, அம்மனாக சித்தரிப்பது தவறு என்றால்,தெய்வமாக பார்க்கப்பவேண்டிய பெண்களை தாசியாய் பார்ப்பது தவறுதானே.

ஆடவா ...
உன்புறக்கண்ணுக்கு அந்த தாசி அம்மனின் 
மறைக்கப்பட்ட நிர்வாண தரிசனம் 
பிடிபட்டுப்போக உபாயம் ஒன்று உண்டு சொல்லட்டுமா...
உன்னுள் இருக்கும் பெண்ணை 
எழுப்பினால் போதும்.

இந்த வரிகள் ஒரு பெண்ணின் மனதை நன்கு அறிந்த ஒருவரால் தான் எழுதமுடியும்.

காதல் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்போதே திடீர் என்று ஒரு ஞானியை போல பேசுகின்றார்.

ஆக்ஞா சக்கரம் ஈர்க்கும் 
வாழ்வின் ஞானமென 
நின்றாய் நீயே 
என் புருவமத்தியாய்.   

வெயிலைப் போன்ற அரூப உணவு.


'காதல் சிறு குறிப்பு வரைக' மற்றும் 'கண்ணாமூச்சி ஆட்டம் ' கவிதைகள்  வசன நடையில் இருந்தபோதிலும்,கருத்து ஆழம் மிக்கவை.


பள்ளி மேடைகளில் கர்நாடக சங்கீதம் தொடர்ந்து போய்க்கொண்டு இருக்கும்போது .கானா பாடலை ஒருவர் பாடியது போல எளிய மக்களின் மொழிகளிலும் கவிதைகள் காணப்படுகின்றது.

 மாரியம்மா விக்கும் ஒண்ணுரெண்டு புளிக்கும் ஆரஞ்சு பயத்தையும் 
பயூக்கவெக்குது கண்ணு தெரியாதவனின் பிச்சைப்பாட்டு.

என்னை ஈர்த்த வரிகள் சில


கனவில் பெய்யும் மழை 

நீர் நிரம்பிய பலூனுக்குள் 
தன்குட்டியைச் சுமந்து திரியும் 
கடல்குதிரையின் ஆண்மையாய்..

காத்திருத்தல் -சுருக்கமான விடையளிக்கவும் 


வரைந்தவன் இல்லாத போதும் 

தெருஓவியத்தின் மீது 
இறைந்து கிடைக்கும் காசுகளை 
பட்டினியில் கடந்து செல்லும் 
பிச்சைக்காரனும் தொடாத..
நம்பிக்கை சாகாதேசத்தில் 

பிச்சை எடுத்து பின் சாகு 


மேகம் என்பது மிதக்கும் நீர் 

கடல் என்பது திரவமேகம் 

பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் .ஆண்களே பெண்ணின் மனதை கொஞ்சம் கடன் வாங்கிக்கொள்ளுங்கள்.


சிறந்த முன்னுரை வழங்கிய மனுஷ்யபுத்திரன் அவர்களுக்கும், அழகிய முகப்போவியம் தீட்டிய ஸ்ரீனிவாசன் நடராஜன் அவர்களுக்கும் , கவிதைகளை புத்தகமாக வெளியிட்ட மேகா பதிப்பகத்திக்கும் என் வாழ்த்துக்கள்.