புதன், 30 ஜனவரி, 2013

ஓர் கலைஞனின் கண்ணிர் !!

மனிதனே உன்மனசாட்சியை ஒருமுறை கேள்
மண்ணில் நீ மனிதயியந்திரமாய் மாறிவிடாதிருக்க
மாறுவேடம் கட்டி கோமாளி போல
மகிழ்விக்க அவன்செய்த காரியங்களை கேலிசெய்து
மூச்சுபிடிக்க சிரித்தாய் அந்த அங்கீகாரத்தை
மதித்தான் அதற்காக நாளும் உழைத்தவனைநீ
மறந்திட்டாய் காலியான கொட்டகையை கண்டதும்
மனம் நொந்தான் முகச்சாயம் கரைய
மண்நனைத்தது ஒருதுளிக்கண்ணீர் !!


ஞாயிறு, 20 ஜனவரி, 2013

உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

உலகில் உங்களை கவர்ந்தபெண்
யாரென்றுகேட்ட மனைவியிடம் மனதில்
மானசீகமாயிருப்பவளின் மேலுண்டான முதற்காதல்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

கொலையை கண்ணால் கண்டிருந்தும்
காவலர் விசாரிக்கும்போது இரக்கமில்லாக்
கயவர்களின் அங்க அடையாளம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா ?

வேறு நிறுவனத்தில் நேர்காணல்
விடுப்பு கேட்டவுடன் முதலாளி
விடுப்பின் காரணம்பற்றிக் கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாதக்கடைசியில் பெற்றபிள்ளை பள்ளியின்மூலம்
இன்பச்சுற்றுலா செல்லப்பணம் கேட்டால்
குடும்பச்சூழ்நிலை பற்றித் தந்தை
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மணிக்கணக்கில் தொலைபேசியில் பேசும்
பெண்ணிடம் யாருடனென்று தாய்கேட்க
பேசுவது தோழனுடன் தானென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மாலைநேரத்தில் நண்பர்களுடன் மதுவருந்தச்செல்லும்
மகனிடம் செல்வதெங்கென்று கேட்டத்தந்தையிடம்
பரிட்சைக்கான கூட்டுமுயற்சி அன்றென்று
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வாழ்வின் கடைசிநாட்களை எண்ணும்
நோயாளியை பரிசோதித்த மருத்துவர்
மருந்தோடு தைரியமுந்தராமல் நிகழப்போகும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தேர்தலின் பிரச்சாரத்தின்போது வாக்குறுதிகளை
அள்ளிவீசும்  கரைவேட்டிக்காரனிடம் அரசியலுக்கு
வந்த நோக்கம்பற்றி நிருபர்கேட்டால்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

ஆடித்தள்ளுபடியில் சலுகை தரப்பட்ட
பொருட்களை வாங்குவோரிடம் தரம்பற்றி
கடைக்காரனும் விலைபற்றி விலைப்பட்டியலும்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

எதிரியின் கையில் அகப்பட்டு
நிராயுதபானியாய் துப்பாக்கி முனையிலிருக்கும்
வீரன் ராணுவ ரகசியம்பற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

மருத்துவரிடம்  அழைத்துச்செல்லப் பணிக்கும்
பெற்றோரிடம் மனைவியுடன்  தனிமையில்
திரைப்படம்பார்க்க நுழைவுச்சீட்டு வாங்கிவிட்டதாக
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

தன்னை விட்டுப்பிரிந்த காதலியை
நண்பன் மனைவியென்று அறிமுகம்செய்ய
தெரிந்தமுகமென்றும் உடைந்த உறவுபற்றி
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

வகுப்பறையில் நேரம் கடந்துவந்த
மாணவனை அறைக்குள் மறுத்த
ஆசிரியரிடம் அனுமதி வாங்க
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?

பலபோரில் புறமுதுகு காட்டிய
மன்னவனைக் காணவந்த ஏழைப்புலவன்
அவன்வீரம் பற்றிக் கவிதைகளில்
உண்மை சொல்லத்தான் வேண்டுமா?செவ்வாய், 15 ஜனவரி, 2013

எவனடா தமிழைப் படிப்பான் !!

தமிழை அலங்கரித்திட ஆயிரம்நூல்கள்
பெருமிதத்துடனும் ஆவலுடனும் எழுத்தாளர்கள்
தமிழை எழுத்துக்கூட்டும் வாசகர்கள்
இதுதான் தமிழின் நிலை

விலையின்றி கிடைத்ததாலோ என்னவோ
விலைமதிப்பற்ற தமிழ்மொழி அறிவை
விழுதுகளாய் இருந்து காக்கவேண்டியவர்கள்
விரல்களால் பிணைக்கப்பட்ட புத்தகமுதறி
விலைகொடுத்துப் பெற்ற ஆங்கிலம்
விடியலை கொணர்ந்ததென்று எண்ணி
வாய்க்கொப்பளித்து தமிழை உமிழ்ந்துவிட்டு
விட்டில்களாய் விளக்கொளியைச் சூழ்ந்துள்ளனர் 
விளக்கிச்சொன்னால் நானந்த மடமையை
விருதாய்க்கொடுப்பர் பித்தர் பட்டம் 

ஆங்கிலேயரோடு வாணிபம் செய்ய
அவர்மொழி அறிதல் தவறன்றெனினும்
அண்மையில் மணம்முடித்தவன் தாய்போல
அன்னைத்தமிழை தவிர்த்தல் முறையன்று

நகமும் முடியும் போன்று
நறுக்கிக்களையும் பொருள் தமிழன்று
நரம்பிலும் மூலையிலும் பாயுங்க்குருதியென
நீயுணர கல்லும்முள்ளும் காலிடறி
நெளிந்தோடும் ரத்தத்தோடு அம்மாயெனும்
நாதம் பிறந்திட உணர்ந்திடுவாய்

பூச்சியமும் ஒன்றும்தான் கணினிமொழி
புதுமைகள் அதைமாற்றிட இயன்றிடுமோ?
புத்திக்கு தானே புரிந்திடுமோ தமிழன்னையின்றி
புதுவுறவாய் வந்த ஆங்கிலத்தை?