ஞாயிறு, 24 மார்ச், 2013

தெய்வம் எங்கே?


ஏக்கமெனும் உப்பலைகள் எண்ணக்கடல் மேலுயர
காக்குங் கடவுளுக்கு காத்திருந்த ராத்திரியும்
பாக்குடன் வெற்றிலையும் வைத்தழையாது வந்ததின்று
தூக்கத்தால் கண்கதிரவன் இமைப்பொதிக்குள் போனபின்னே

கவலைகள் நித்தமும் கற்களாய் குவிந்து
மலைச்சிகரமாய் மண்டிப்போக மனம் சலியாது
சிலையென சிகரத்தின் சிரசில் நின்றோனென்
நிலை கண்டிங்கு நிஜத்தினில் வருவானென

நெஞ்சமதில் நித்தமும் கடவுளின் நினைவோடு
தஞ்சம்புக பிறந்தவீடு ஆலயமென்று எண்ணி
மஞ்சம் துறந்திங்கு மலைமுகட்டில் கால்கள்
கெஞ்ச காத்திருந்தவனை காணச் சென்றேன்

கட்டுக்கதை கட்டிவிட்டார் கடவுளை கல்லென
எட்டநின்று பார்ப்பவற்கு எப்படித் தெரிந்திருக்கும்
கிட்டே சென்றேன் கட்டித் தழுவினேன்
கொட்டிவிட்டேன் கடவுளின் காதில் கவலைகளை

தேக மதிர தோளில் தட்டிக்கொடுத்தான்
மேகத்திரள் எடுத்து கண்ணீர் துடைத்தான் 
சோகம் பகிர்ந்த கறுத்த மேகங்கள்
உலகம் நனைந்திட கண்ணீரை பொழியக்கண்டு

விரித்த தோகையோடு வண்ணமயில் நடனமிட
சிரித்த ஒலி இடியென வானையுலுக்க
மரித்த உடல் உயிர்பெற்று பந்துபோல்
தெரித்தெழ களிநடம் புரிந்தான் கடவுளுமிங்கு

அந்தமும் ஆதியு மில்லாது தனித்து
சொந்த பந்த உறவறுத் திருந்தேன்
தந்தையும் தாயும் நீயென கருதி
பந்த பாசம் பகட்டினாயென் புத்திக்கென்று

சுகந்த மணந்தவழ நின்ற சுந்தரன்தான்
நடந்தயென் காலார தன்மடிக்கிடத்தி
கடந்த சோகம்மறைய கண்ணுறக்கம் தந்திட்டான்
கிடந்த நிலையிலே கண்விழித்தேன் தாய்மடியில்  

வியாழன், 21 மார்ச், 2013

நண்பனே நீயெங்கே??

வெளிச்சத்தின் நிழலாய் இருக்கும்
இருள்போல நான் வெளிச்சம் நீ
அண்டங்கள்கடக்கும் தொலைவினில் நாம்
நீ வளர்ந்தால் நான் வளர்வேன்
வளர்பிறையாய் நீ தேய்பிறையாய் நான்
இருதுருவங்கள் போலநாம் இணையாவிடினும்
நதி பிணைக்கும் இருகரைகள்போல 
ஈர உணர்வு நம்நெஞ்சங்களை பிணைக்கட்டும்


என்னை விட்டுச் செல்லாதே...

சவலைப் பிள்ளையாய் பிறந்திருக்கலாம்
சம்சாரி ஆகாமல் தாயின்
சேலையின் நுனியை பிடித்திழுத்து
செல்லவிடாமல்  தடுத்திருப்பேன் முதியோர் இல்லம்


திங்கள், 18 மார்ச், 2013

நெஞ்சமேங்கும் நொடிகள் !!!

விழிகள் என்னும் மீன்கள்
கண்மீன்கள் வீசிடும் வலைகள்
இமையுனுள் கருவறைகள்
அதில் ஆனந்தக்  கண்ணீர் குளங்கள்
விரல்கள் என்னும் விலங்கில்
கைகோர்த்திட துடிக்கும் மனது
காதில் ஆடிடும் தோடு
என்னை தாலாட்டிடும் தொட்டில்
உன் ஸ்பரிசம் பட்டபிறகு
மெல்ல குறைந்திடும் வருடம்
சிப்பிவாய்திறந்து முத்தமொன்று கொடுத்தபின்னே
வேறுசெல்வம் வேண்டுமோ உள்ளம் ?